Friday, November 21, 2008

நிழலற்ற பெருவெளி...




கருப்பு நிலா


ருக்கு நடுவாக
அது,
வந்துவிட்டது.
நாளுக்கு
நான்கு எரிக்கவும்
நான்கு புதைக்கவும்
தவறுவதில்லை,
அதன் கணக்கு.

குளிர் காலத்தில்
கூடுதலாகவும்,
மழைக்காலத்தில்
இன்னும் கூடுதலாகவும்...
எகிறிப் போவதுண்டு
எண்ணிக்கை.

குத்துப்பட்டது,
குடல் சரிய
வெட்டுப்பட்டது,
கள்ளக் காதலில்
கசாப்பானது,
நல்ல காதலில்
தோல்வி கண்டது,
எல்லாமே
போனஸ்கள்.

மருந்து குடித்து
மாண்டதும்,
வாழ முடியாமல்
நாண்டதும்,
கருணைத் தொகை.

தீராத வயிற்றுவழி தீர
மாய்த்துக் கொண்ட
மடந்தை பின்னால்,
திகிலூட்டும்
கதைகள் வரும்.

எங்கேயோ நடந்த கதைக்கு
பெட்ரோல், சீனி தயவில்
சீக்கிரமே முடிவு வரும்.

சட்ட ரீதியாய் சில தகனம்
சமயங்களில்
சட்ட மீறலாய் சில தகனம்.
வரவுகள் மட்டுமே
இங்கு வரவாகும்.
செலவுகளுக்கு
இடமே இல்லை.

சாதிக்கு ஒன்றாய்
எரி கொட்டகைகள்.
படுக்கவைத்துப் புதைக்கவும்
அமரவைத்துப் புதைக்கவும்
ஆங்காங்கே
'தனி'த் தோட்டங்கள்.

சாந்தியடையும் இடத்திலும்
சமத்துவமில்லை.
*
வரிசையாக வந்த வாகனங்களில்
நிறைய பேர் அதிகாரிகள்,
முதல் நிலையிலிருந்து
கடை நிலை வரைக்கும்.
சுற்றிச்சுற்றி வந்தவர்கள்
காகிதச் சுருளை விரித்தார்கள்.
பார்த்தார்கள்.
மடக்கினார்கள்.
கிளம்பினார்கள்.
*
எரிந்து போன ஆவியும்
புதைந்து போன ஆவியும்
பேசிக்கொண்டன.

'என்ன பண்ணப் போறாங்களாம்?'

'ஊருக்குள்ள இருக்குதுன்னு
இடம் மாத்தப் போறாங்களாம்!'

'ஊருக்குள்ள சுடுகாடு இருக்கா?
ஊருதானே அதைச் சுத்தியிருக்கு!'

பேசிக்கொண்டிருந்த ஆவிகள்,
நுனிபோன்ற வாலாலும்
துடுப்புப்போன்ற கையாலும்
அடித்துக்கொள்ள
ஆரம்பித்தன.
நன்றி : திண்ணை

No comments: