Saturday, November 29, 2008

கோடையில் ஒருநாள்!

கருப்பு நிலா

ற்றுநேரத்திற்கு முன்பு வரை
சூரியனைக்கொண்டிருந்த வானம்
கருத்துத் திரண்டது,
காளிசிலையின் உருவம் போல.
வானம் மிணுத்து,
மேகம் தளும்பியது.
தூரத்தில் ஒரு மின்னல்
கருத்தத் திரையில்
வெள்ளிக் கோலம் போட்டுப் போனது
தொடர்ந்து வந்த ஒலியில்
கும்மியடித்தது வானம்.
புள்ளியாய்த் துவங்கி
சாரலாய்த் தொடர்ந்து,
வேகமெடுத்தன,
நீர்த்துளிகள்
காய்ந்த தரை
ஈரம்பட்டுச் சிரித்தது
கூடிமுயங்கியது போல
சூழலில் சப்தம்.
நீர்த்துளியின்
பொருண்மை மிகுந்து
குளிர்ந்த நிலம்
ஈரத்தில் நடுங்கியது
மழை நின்றபோது
வெற்றிபெற்ற காளைபோல
மேகம் கரைந்து போயிருந்தது
தரையின் ஈரம்,
பெண்மனம்போல்
நாணிச் சிலிர்த்தது.
இனி எப்போது வரும்
இதுபோல் ஓர்நாள்?
karuppunilaa@gmail.com


நன்றி : கீற்று

Friday, November 21, 2008

நிழலற்ற பெருவெளி...




கருப்பு நிலா


ருக்கு நடுவாக
அது,
வந்துவிட்டது.
நாளுக்கு
நான்கு எரிக்கவும்
நான்கு புதைக்கவும்
தவறுவதில்லை,
அதன் கணக்கு.

குளிர் காலத்தில்
கூடுதலாகவும்,
மழைக்காலத்தில்
இன்னும் கூடுதலாகவும்...
எகிறிப் போவதுண்டு
எண்ணிக்கை.

குத்துப்பட்டது,
குடல் சரிய
வெட்டுப்பட்டது,
கள்ளக் காதலில்
கசாப்பானது,
நல்ல காதலில்
தோல்வி கண்டது,
எல்லாமே
போனஸ்கள்.

மருந்து குடித்து
மாண்டதும்,
வாழ முடியாமல்
நாண்டதும்,
கருணைத் தொகை.

தீராத வயிற்றுவழி தீர
மாய்த்துக் கொண்ட
மடந்தை பின்னால்,
திகிலூட்டும்
கதைகள் வரும்.

எங்கேயோ நடந்த கதைக்கு
பெட்ரோல், சீனி தயவில்
சீக்கிரமே முடிவு வரும்.

சட்ட ரீதியாய் சில தகனம்
சமயங்களில்
சட்ட மீறலாய் சில தகனம்.
வரவுகள் மட்டுமே
இங்கு வரவாகும்.
செலவுகளுக்கு
இடமே இல்லை.

சாதிக்கு ஒன்றாய்
எரி கொட்டகைகள்.
படுக்கவைத்துப் புதைக்கவும்
அமரவைத்துப் புதைக்கவும்
ஆங்காங்கே
'தனி'த் தோட்டங்கள்.

சாந்தியடையும் இடத்திலும்
சமத்துவமில்லை.
*
வரிசையாக வந்த வாகனங்களில்
நிறைய பேர் அதிகாரிகள்,
முதல் நிலையிலிருந்து
கடை நிலை வரைக்கும்.
சுற்றிச்சுற்றி வந்தவர்கள்
காகிதச் சுருளை விரித்தார்கள்.
பார்த்தார்கள்.
மடக்கினார்கள்.
கிளம்பினார்கள்.
*
எரிந்து போன ஆவியும்
புதைந்து போன ஆவியும்
பேசிக்கொண்டன.

'என்ன பண்ணப் போறாங்களாம்?'

'ஊருக்குள்ள இருக்குதுன்னு
இடம் மாத்தப் போறாங்களாம்!'

'ஊருக்குள்ள சுடுகாடு இருக்கா?
ஊருதானே அதைச் சுத்தியிருக்கு!'

பேசிக்கொண்டிருந்த ஆவிகள்,
நுனிபோன்ற வாலாலும்
துடுப்புப்போன்ற கையாலும்
அடித்துக்கொள்ள
ஆரம்பித்தன.
நன்றி : திண்ணை

Friday, November 14, 2008

இருள்வெளி!




கருப்பு நிலா



தெப்பத்தின்
நீரலையும் படிகளில்
குமிழ்விட்டு வாய்த் திறக்கின்றன,
ஓராயிரம் மீன்கள்.
ஆழத்தின் நடுவிலிருந்து
அபயம்கேட்டு எழுகிறது,
திரட்சியில்லாத
கை ஒன்று!
திறந்திருக்கும்
அதன் உள்ளங்கையில்,
'உ'வோ, '+'யோ எழுதியிருக்கிறது.
பிறைநிலவாகக் கூட இருக்கலாம்.
நீரில்பாய
நான் முயலுகையில்,
காக்கும் கடவுள்
என்முன் தோன்றினார்.
அபயம் கேட்ட
கையை புன்னகையுடன் பார்த்தார்.
*
அபயம் கேட்ட கை
உடலாய் மிதக்கிறது,
இப்போது நீரில்.
கையில் காணப்பட்ட
குறி
காணாமல் போயிருந்தது.
இருள்வெளியில்
பதுங்கிக்கொண்ட
கடவுளுக்கு பூஜை நடக்கிறது.
மணி ஒலி கேட்கிறது.
*
குமிழ்விட்டு வாய்த் திறக்கின்றன,
ஓராயிரம் மீன்கள்.
நன்றி : திண்ணை